ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போட்டியாக டெல்லி கேபிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதல் அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 264 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதும், பஞ்சாப் கிங்ஸ் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தத் தோல்விக்கு, பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த இரண்டு எளிய கேட்ச்களைக் கோட்டைவிட்ட கருண் நாயர் தான் காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

​ஆனால், இந்த விவகாரத்தில் கருண் நாயர் மீது துளிக்கூடத் தவறில்லை என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “152 ரன்கள் விளாசிய கே.எல்.ராகுல் ஓய்வெடுத்தபோது, அவருக்குப் பதிலாக இளம் விக்கெட் கீப்பர் அபிஷேக் போரலைத் தான் டெல்லி அணி களமிறக்கியிருக்க வேண்டும்.

அதை விடுத்து, சிறந்த ஃபீல்டரான ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை விக்கெட் கீப்பிங் செய்ய வைத்துவிட்டு, பயிற்சியால் சோர்வாக இருந்த கருண் நாயரை ஃபீல்டிங்கில் இறக்கியது டெல்லி நிர்வாகத்தின் மிகப்பெரிய தவறு. ஸ்டப்ஸ் நின்ற இடத்தில் தான் கருண் நாயர் நின்றார். போரல் வந்திருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது” என்று அஸ்வின் போட்டு உடைத்துள்ளார். அஸ்வினின் இந்த விளக்கம் டெல்லி அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களின் முடிவுகளை இப்போது கேள்விக்குறியாக்கியுள்ளது.