அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறி ‘கிரீன் கார்டு’ வாங்க வேண்டும் என்று காத்திருக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கக் கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, இப்போது விண்ணப்பிக்கும் ஒரு இந்தியர் கிரீன் கார்டு பெற சுமார் 179 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஒரு மனிதனின் வாழ்நாளையே தாண்டிய இந்தக் காத்திருப்பு காலம் இந்தியப் பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சுமார் 10 லட்சம் இந்தியர்களும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் கிரீன் கார்டுக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். உலக அளவில் காத்திருப்பவர்களில் 79 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கச் சட்டப்படி, ஒரு நாட்டிற்கு ஆண்டுக்கு 7 சதவீதத்திற்கு மேல் கிரீன் கார்டு வழங்கப்பட மாட்டாது. இந்தியாவின் மக்கள் தொகையும் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால், இந்தப் பங்கீடு முறை இந்தியர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
விண்ணப்பதாரர்களின் தகுதியைப் பொறுத்து இந்தக் காத்திருப்பு காலம் மாறுபடுகிறது. EB-1 பிரிவில் 5 ஆண்டுகள், EB-3 பிரிவில் 38 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கான EB-2 பிரிவில்தான் அந்த அதிர்ச்சிகரமான 179 ஆண்டுகள் காத்திருப்பு காலம் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தத் தேக்கம் மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்த நீண்ட காலதாமதம் காரணமாகத் திறமையான இந்தியர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் அமெரிக்க நிறுவனங்களும் திணறி வருகின்றன. இந்த அமைப்பை அமெரிக்க அரசு மாற்றியமைக்குமா என்பதே இப்போது பலரின் கேள்வியாக உள்ளது.
