துலீப் கோப்பை 2026 தொடரில் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி, நடப்புச் சாம்பியனான மத்திய மண்டல அணியை வீழ்த்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. விறுவிறுப்பாக நடந்த இந்த அரையிறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கிழக்கு மண்டலம் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் மத்திய மண்டல அணி 266 ரன்கள் எடுத்தது. அதன்பின் களம் இறங்கிய கிழக்கு மண்டல அணியும் அதே 266 ரன்களை எடுத்து ஆட்டத்தைச் சமன் செய்தது. இதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 92 ரன்களும், அபிமன்யு ஈஸ்வரன் 69 ரன்களும் எடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முகேஷ் குமார் மற்றும் முகமது ஷமியின் சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மத்திய மண்டல அணி 158 ரன்களுக்குள் சுருண்டது. இதில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கிப் பயணித்த கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷன் அமைதியாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார். 140 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியபோது, கேப்டன் இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
East Zone are into the final 👏 Mohd. Shami hits the winning runs 👌 They beat defending champions Central Zone by 4⃣ wickets 🙌#DuleepTrophy | #CZvEZ Scorecard ▶️ https://t.co/kyExeix2VY pic.twitter.com/yzYIVMctVH — BCCI Domestic (@BCCIdomestic) September 1, 2026 “>
இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 42 பந்துகளில் அரைசதம் அடித்து, துலீப் கோப்பை வரலாற்றிலேயே அரைசதம் அடித்த மிக இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். போட்டி முழுவதும் சிறப்பாகப் பந்துவீசி மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகேஷ் குமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
