நேபாளத்தில் கரைபுரண்டு ஓடும் போதேகோஷி ஆற்றின் வெள்ளப்பெருக்கினாலும் நிலச்சரிவாலும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,900-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், நுவாகோட் மாவட்டத்தில் மீட்புப் பணியின் போது வீட்டின் கதவைத் திறந்தவுடன் 23 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பிற்காக வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று ஒதுங்கிய பயணிகள் வெள்ள நீரிலும் இடிபாடுகளிலும் சிக்கி உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்ட உடல்களில் ஒரு தாய் தன் குழந்தையை மடியில் இறுக்கமாக அணைத்தபடி இருந்த காட்சி மீட்புக் குழுவினரின் நெஞ்சை உலுக்கியுள்ளது. மேலும், இந்திய எல்லையையொட்டிப் பாயும் கண்டக் ஆற்றிலும் 23 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேபாள வெள்ளத்தில் 11,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 23,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, நீர்மின் திட்டப் பகுதிகளில் பணியாற்றிய 100-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆறாவது நாளாகத் தொடர்பில்லாமல் சிக்கியுள்ளனர்.

பேரழிவு நடந்து பல நாட்கள் கடந்துவிட்டதால், இடிபாடுகளுக்குள் புதைந்துள்ள உடல்கள் சிதைவடைந்து வெள்ளப் பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெருந்தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தியத் தூதரகம் மற்றும் நேபாள அரசின் சார்பில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும் தொலைதூரப் பகுதிகளில் தேடுதல் பணி தாமதமாவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.