உத்தரப்பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் பகுதியில் நடந்துள்ள ஒரு கோரச் சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 23 வயது நபர் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாட வருமாறு அழைத்த 22 வயது காதலியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்து, பின்னர் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இளம் பெண் ஃபெரோசாபாத்தைச் சேர்ந்தவர். இவர் குர்கிராமில் உள்ள ஒரு விரைவு இ-காமர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தபோது, அவருடன் 12-ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த 23 வயது நபர் அவரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அன்றைய தினம் அந்த வாலிபரின் பிறந்தநாள் என்பதால், இருவரும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். இதனால் ஊருக்குச் செல்ல விடாமல் தடுத்த அந்த நபர், அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் வயகரா மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு, அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி நள்ளிரவு மற்றும் 27-ஆம் தேதி விடியற்காலையில் மீண்டும் அந்த நபர் பெண்ணுடன் உறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பெண் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அவரைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மறுநாள் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பெண்ணின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் உள் இரத்தப்போக்கு காரணமாகவே மரணம் நிகழ்ந்துள்ளது உறுதியானது. பாதிக்கப்பட்ட பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவ்வழக்கில் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு முக்கியக் குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே இவனுடன் உடந்தையாக இருந்த 24 வயதுடைய மற்றொரு நபரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் ஹோட்டல் பதிவேடுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சான்றுகளின் அடிப்படையில் போலீசார் விரிவான விசாரணையை நடத்தி வருகின்றனர்.
