நேபாளத்தின் பால்கர் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 4,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்தச் சோகத்தில், கைலாச மானசரோவர் யாத்திரை சென்றிருந்த 24 வயது நீட்-பிஜி (NEET-PG) மாணவி தன்வியின் பெற்றோரும் அடங்குவர்.
தனது பெற்றோரைக் காணவில்லை என்ற பெரும் மனவேதனையிலும், தன்வி காட்டிய துணிச்சலையும் மன உறுதியையும் பலரும் பாராட்டி வருகின்றனர். பெற்றோரின் கனவை நினைவாக்க வேண்டும் என்பதற்காக, இந்த மிகக் கடினமான சூழலிலும் அவர் மனம்தளராமல் நீட் பிஜி தேர்வை எழுத முடிவு செய்தார்.
தேர்வு அறையில் அமர்ந்திருந்தபோது அவரது கைகள் நடுங்கின, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அழுகையால் கணினித் திரைகூடத் சரியாகத் தெரியாத நிலையிலும், அவர் விடாமுயற்சியுடன் தேர்வை எழுதி முடித்தார்.
தனது தந்தை தன்னை நிச்சயம் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியிருந்ததால் மட்டுமே, அந்தப் பிடிவாதத்துடன் தான் தேர்வை எழுதியதாகத் தன்வி தெரிவித்துள்ளார். மூன்று மணி நேரத் தேர்வில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அழுதுகொண்டே தான் தேர்வு எழுதியதாக உணர்ச்சிப்பூர்வமாகக் கூறியுள்ளார்.
தன்வியின் இந்தப் போராட்டம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாகவும், அவரது தைரியத்தைப் பலரும் பாராட்டி ஆறுதல் கூறி வருவதுமாகவும் உள்ளது.
