இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியின் போது பந்து முகத்தில் பலமாகத் தாக்கியதில் மிகக் கடுமையான காயத்திற்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களைப் பதற வைத்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவரது வலது கண்ணுக்குக் கீழே பயங்கரமாக வீங்கிப் போயிருப்பதையும், கன்னத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வழிவதைத் தடுக்க பஞ்சு வைக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. இவ்வளவு பெரிய காயத்திலும், “அந்தக் கிரிக்கெட் பந்தின் நிலைமை என்னாச்சுன்னு வந்து பாருங்க” என அவர் நக்கலாகப் பதிவிட்டுள்ள போதிலும், புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

​34 வயதான பென் ஸ்டோக்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அடுத்தடுத்த காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் தான் தசைப்பிடிப்பு மற்றும் முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த அவருக்கு, இப்போது முகத்திலேயே பலத்த அடி விழுந்திருப்பது அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 4-1 எனத் தோல்வியடைந்த நிலையில், ஸ்டோக்ஸின் கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்தன. இருப்பினும், ஜூன் மாதம் தொடங்கவுள்ள நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கு முன்பாக அவர் முழுமையாகக் குணமடைந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.