இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாக நடிகை குஷி முகர்ஜி மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு காசிப்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகை குஷி முகர்ஜி, தனக்கு கிரிக்கெட் வீரர்களைப் பிடிக்காது என்றும், ஆனால் சூரியகுமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் அடிக்கடி தமக்கு குறுஞ்செய்தி அனுப்பி பின்தொடர்வதாகவும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.
திருமணமான ஒரு சர்வதேச வீரரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஆதாரமற்ற புகார்களைக் கூறியதாக அவர் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சூரியகுமார் யாதவின் சொந்த ஊரான உத்திரப்பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த ஃபைசான் அன்சாரி என்பவர் இந்த சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இந்நிலையில் தவறான தகவல்களைப் பரப்பி விளம்பரம் தேடும் நோக்கில் செயல்பட்ட நடிகையை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அவர் காவல் துறையிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, சூரியகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிஷா தரப்பில் இருந்து இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
