கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் முண்டூரைச் சேர்ந்தவர் 75 வயது தங்கமணி. இவரது மகள் சந்தியா (45), கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் 29 வயது இளைஞரான நிதின் என்பவருடன் சந்தியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

நிதின் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்பட்டபோது, அவருக்கு உதவுவதற்காக சந்தியா தன் தாய் தங்கமணியிடம் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கேட்டுள்ளார். தாய் தங்கமணி தங்கச்சங்கிலியைக் கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியுள்ளது.

ஆத்திரமடைந்த சந்தியா, தன் தாயைத் தள்ளிவிட்டதில், கீழே விழுந்த தங்கமணியின் தலையில் பலத்த அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாயின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த சந்தியா, உடனே தனது கள்ளக்காதலன் நிதினுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இருவரும் சேர்ந்து இந்தக் கொலையை மறைக்கத் திட்டமிட்டு, தங்கமணி வீட்டில் கால் தவறி விழுந்து இறந்தது போல் சித்தரிக்க முடிவு செய்தனர்.

அதன்படி, சடலத்தை வீட்டின் பின்புறத்தில் போட்டு நாடகமாடியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தங்கமணியின் தலையில் காயங்கள் இருந்ததால் விபத்து என முதலில் கருதினர். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தங்கமணியின் தலை மட்டுமின்றி கழுத்திலும் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், காணாமல்போன தங்கச் சங்கிலியை மையமாக வைத்து துப்பு துலக்கினர். மகள் சந்தியாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் கொலையை ஒப்புக்கொண்டார். தாயைக் கொன்று நாடகமாடிய சந்தியாவையும், அதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் நிதினையும் போலீசார் கைது செய்துள்ளனர்