அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கலந்து கொள்ளவுள்ள கால்பந்து கண்காட்சி போட்டி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள சிங்கரேணி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு எதிராக தெலுங்கானா பா.ஜ.க. கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வருகைக்காக அரசுத் தரப்பில் அதிகளவில் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகேஷ்வர் ரெட்டி தலைமையில், நேற்று சிங்கரேணி கிரிக்கெட் மைதானத்தை பா.ஜ.க. தொண்டர்கள் முற்றுகையிட்டனர். இதனைத் தடுக்கும் முயற்சியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் போது மகேஷ்வர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது தனிப்பட்ட கால்பந்து வேடிக்கைக்காக ரூ.100 கோடி அளவிலான பொது மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இந்த தொகையை சிங்கரேணி தொழிலாளர்களின் நலனுக்காக செலவிட்டிருக்கலாம்.
நாட்டின் சிறந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சிங்கரேணி மைதானம், இப்போது கால்பந்து கண்காட்சி போட்டிக்காக மாற்றப்படுகிறது. மெஸ்ஸி வருகைக்காக அரசாங்கம் எந்தத் துறைகளிலிருந்து நிதியை எடுத்தது, அது எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை தெளிவாக விளக்க வேண்டும். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்காவிட்டால், கால்பந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம். மேலும், முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், மக்கள் உங்களுடன் ‘கால்பந்து விளையாடுவார்கள்’,” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் இதற்கிடையில் மெஸ்ஸியின் வருகையை முன்னிட்டு அவரை காண வந்த ரசிகர்களுக்கு 7000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் அவர் பாதியில் திரும்பியதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தால் மைதானத்தை சூறையாடினார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டளாரை போலீசார் கைது செய்த நிலையில் ரசிகர்களின் பணம் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
