தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது சிஎன்ஜி (CNG) எரிவாயு விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் சிஎன்ஜி விலை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் ஒரு கிலோ சிஎன்ஜி 93.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் நிலவி வரும் எரிபொருள் விலை உயர்வால் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர்கள், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி-க்கு மாறிய நிலையில், தற்போது இதிலும் விலை ஏற்றம் கண்டிருப்பது அவர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
இந்தத் திடீர் விலை உயர்வு காரணமாக, வரும் நாட்களில் ஆட்டோ கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அன்றாடப் பயணங்களுக்கு ஆட்டோக்களைச் சார்ந்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
