ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஸ்த்வார் மாவட்டம் சிசோடி கிராமத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கானோர் சிக்கிய நிலையில், இதுவரை 46 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அதில் 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், 100 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் காணாமல் போயுள்ளதாகவும், இன்னும் பலர் சிக்கியிருக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கில் தற்காலிக முகாம்கள், பாலங்கள் உட்பட பல அமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் மச்சைல் மாதா கோவில் அருகே நிகழ்ந்ததாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் தெரிவித்தார். தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனுடன் காஷ்மீர் காவல் துறை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை, சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப். ஆகிய படையினரும் இணைந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.