அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வேணுகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போதைய அதிமுக தலைமை மீது அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு கடந்த 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இருமுறை எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி. வேணுகோபால். நாடாளுமன்றத்தில் அதிமுக குழுத் தலைவராகவும், மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை நிலைக்குழு மற்றும் பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகளையும் வகித்து அக்கட்சியின் முக்கிய முகமாகச் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் அதிமுகவின் தொடர் தோல்விகளுக்குப் பின்னால் பல்வேறு சமூகக் காரணங்கள் உள்ளன. ஆனால், தற்போதைய தலைமை கட்சியில் உள்ள அனைவரையும் அனுசரித்து, அரவணைத்துச் செல்லத் தவறிவிட்டது என்று இபிஎஸ் தலைமை மீது வேணுகோபால் நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலர் அடுத்தடுத்து அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், இருமுறை எம்பியாக இருந்த வேணுகோபாலின் இந்த விலகல் முடிவு, குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.