ஓபிஎஸ் அணியின் தூணாக இருந்த தர்மர் எம்பி, திடீரென இபிஎஸ் முகாமுக்குத் தாவியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆர். தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர்.
கடந்த 2022-ல் ஓபிஎஸ் பரிந்துரையின் பேரிலேயே அவர் எம்பி-யாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று மாலை சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அவர், முறைப்படி அதிமுகவில் இணைந்தார்.
தன்னுடைய இந்த திடீர் முடிவு குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தர்மர் எம்பி, “அதிமுக என்ற மாபெரும் இயக்கம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமைதான் சிறந்தது.
இரட்டை இலைச் சின்னம் இருந்தால் மட்டுமே நம்மால் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்குச் சேவை செய்ய முடியும். ஓபிஎஸ் அணியில் தனித்தனியாகச் செயல்படுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதால், தாய் கழகமான அதிமுகவிலேயே இணைந்துவிட்டேன்” என்று விளக்கமளித்துள்ளார்.
