மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் டிரைவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை அழைத்துச் செல்வதற்காகத் தனியாக வேன் வசதி உள்ளது. இந்த வேனை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஓட்டி வந்தார். வழக்கம்போல நேற்று மாலை பள்ளி முடிந்ததும், மாணவ – மாணவியரை ஏற்றிக்கொண்டு வேன் புறப்பட்டது. ஒவ்வொருவராக அவர்களது வீடுகளில் இறக்கிவிடப்பட்ட நிலையில், இறுதியில் ஒரு மாணவி மட்டும் வேனில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்ட டிரைவர், அந்த மாணவிக்கு வேனிலேயே வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, வீட்டிற்குச் சென்றதும் நடந்த விவரத்தைத் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட வேன் டிரைவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு கருதி டிரைவரின் பெயரை வெளியிடப் போலீசார் மறுத்துவிட்டனர்.
