திருமணமாகி வெறும் 65 நாட்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்த தம்பதியினர், விவாகரத்து பெறுவதற்காக 13 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்திய சம்பவம் உச்ச நீதிமன்றத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணமான இந்த ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக 65 நாட்களிலேயே பிரிந்தனர். அதன் பிறகு டெல்லி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒருவருக்கு ஒருவர் எதிராக 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றங்களை போர்க்களமாக மாற்றினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் மன்மோகன் சிங் அடங்கிய அமர்வு, தம்பதியினரிடையே நிலவும் கசப்புணர்வு மீண்டும் சேர முடியாத நிலையை எட்டிவிட்டதைச் சுட்டிக்காட்டியது. “திருமண உறவு முற்றிலும் முறிந்துவிட்ட நிலையில், சட்டப்படி அவர்களை இணைத்து வைத்திருப்பது அர்த்தமற்றது” எனக் கூறி, அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அசாதாரண அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

 தம்பதியினருக்கு அபராதம் விதித்த நீதிபதிகள்!

இந்தத் தீர்ப்பின் போது தம்பதியினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்வதற்கான இடமாக நீதிமன்றங்களைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். 13 ஆண்டுகளாகப் பல நீதிமன்றங்களின் நேரத்தை வீணடித்ததற்காக இரு தரப்பினருக்கும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, இனிமேல் ஒருவர் மீது ஒருவர் புதிய வழக்குகளைத் தொடரவும் தடை விதித்தனர்.

மேலும், திருமணத் தகராறுகள் தொடர்பாகப் புகார் அளிக்கப்படும்போது, காவல் துறை முதல் முயற்சியாகச் சமரசத்தையே மேற்கொள்ள வேண்டும் என்றும், கைது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மீண்டும் இணைய முடியாத பகையை உருவாக்கிவிடும் என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

கணவர் விவாகரத்து வழங்க முன்வராத நிலையிலும், மனைவி ஜீவனாம்சம் கோராமல் விவாகரத்து கேட்ட மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண் தனது வாழ்க்கையை மீண்டும் அமைத்துக்கொள்ள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது.