கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தாய் மற்றும் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தலைமறைவாக இருந்த கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் கமலேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கிரீமா (30) என்பவருக்கும், உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அயர்லாந்தில் பணியாற்றி வந்த உன்னிகிருஷ்ணனுக்கும், கிரீமாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கிரீமா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் சயனைடு (Cyanide) உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தத் தற்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த உன்னிகிருஷ்ணனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கேரளாவிலிருந்து வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய போலீசார், அங்கு வெளிநாட்டிற்குத் தப்ப முயன்ற உன்னிகிருஷ்ணனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
மேலும் இதற்கிடையில் தற்கொலைக்கான காரணம் குறித்து சுஜிதா எழுதி அதனை தன்னுடைய உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அதில் திருமணத்தின்போது 200 சவரன் தங்க நகைகள், ஒரு வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்த போதிலும் அதனை என் மகளின் கணவர் போதாது எனக் கூறி மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்.
என் மகளின் திருமண வாழ்க்கை 25 நாட்கள் கூட நீடிக்காத நிலையில் காரணமே இல்லாமல் என் மகளைப் பிரிந்து சென்று விட்டார். மேலும் உன்னிகிருஷ்ணனால் என்னுடைய மகள் மிகவும் அவமானப்பட்டதாகவும் அதனால் மிகுந்த மன வேதனையில் இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது உன்னிகிருஷ்ணனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..
