மத்தியப்பிரதேச மாநிலம் இந்தோரைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் ஹிதேந்திர சிங் என்பவரை மிரட்டி, பெரும் தொகையைப் பறிக்க முயன்ற வழக்கில் போபாலைச் சேர்ந்த ‘தேன்மகள்’ ஸ்வேதா ஜெயின் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஆரம்பத்தில் தொழிலதிபருக்கு ஒரு சாதாரண வணிக வாய்ப்பை வழங்குவது போல அணுகிய கும்பல், பின்னர் அல்கா தீட்சித் என்பவருடன் 50 சதவீத பங்குகளைப் பகிர்ந்துகொள்ளும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஹிதேந்திர சிங்கை வற்புறுத்தியுள்ளது. இதற்கு அவர் உடன்படாததால், கடந்த ஏப்ரல் 28 அன்று இந்தோரின் சூப்பர் காரிடார் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த அவரை வழிமறித்த கும்பல், “எங்களுடன் கூட்டாளியாகுங்கள் அல்லது 1 கோடி ரூபாய் பணம் கொடுங்கள்” எனப் பகிரங்கமாக மிரட்டியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில் இந்தூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்திற்குரிய நபர்களின் தொலைபேசி அழைப்புகள், சமூக ஊடகத் தொடர்புகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, இதில் ஸ்வேதா ஜெயினுக்கு முக்கியத் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனால் இவர் ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான ‘ஹனி டிராப்’ பெண்களைக் கொண்டு வலைவீசிப் பிடிக்கும் வழக்குகளில் தொடர்புடைய முதன்மை குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது போபாலின் மினல் பகுதியில் பதுங்கியிருந்த அவரை இந்தூர் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர்.
