தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், சக மாணவியை ரூமுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் உதய் என்ற மாணவன், தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்துள்ளார். கடந்த மே 14-ஆம் தேதி அன்று தில்சுக்நகர் பகுதிக்குத் தனது தோழியை டீ குடிக்கலாம் என உதய் பைக் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
திரும்பி வரும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு மறைவிடத்தில் வைத்து உதய் மது அருந்தியதோடு, குடிக்க மறுத்த தனது தோழியையும் கட்டாயப்படுத்தி, மிரட்டி மதுவை குடிக்க வைத்துள்ளார்.
இதனால் அந்த மாணவி போதையில் நிலைகுலைந்ததைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட உதய், கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதி (Hostel) அறைக்கு அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கொடூரமாகப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் உடனடியாக ஆக்ஷனில் இறங்கிய போலீசார், வழக்குப்பதிவு செய்து காமவெறி பிடித்த இன்ஜினியரிங் மாணவன் உதயை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
