தமிழகத்தின் முன்னால் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகாலமாக மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையும், ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கேட்டு 14 நாட்களாகத் தொடர்ந்து போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான போராட்டமும் திமுக அரசின் மெத்தனப் போக்கினால் இன்று பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கைகளில் ஊதியச் சீரமைப்பு குறித்து வாய்நிறைய வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவற்றை நிறைவேற்றாமல் ஆசிரியப் பெருமக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளார்.
மாணவர்களின் சாதனைகளில் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடிக்கொள்ளும் முதலமைச்சர், அந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் கண்ணீரைத் துடைக்காமல், ‘வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை’ என அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவிவிடுவது தமிழகக் கல்வி வரலாற்றிலேயே ஒரு கருப்புப் புள்ளியாக மாறியுள்ளது. சமத்துவம், சமூக நீதி என மேடைக்கு மேடை முழங்கும் திமுக அரசு, உண்மையில் ஆசிரியர்களுக்குச் செய்வது துரோகமே என்பதை உணர்ந்துள்ள தமிழக மக்கள், உரிமைகளை நசுக்கும் இந்த சர்வாதிகாரப் போக்கிற்கு விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி என்று பதிவிட்டுள்ளார்.
