பாகிஸ்தானில் காது கேளாத, வாய் பேசமுடியாத 15 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, வயதான நபருடன் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிந்து மாகாணம் கோர்வா நகரைச் சேர்ந்த அந்த 15 வயது இந்து சிறுமி கடந்த 9 நாட்களுக்கு முன் காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர் உடனடியாக உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், நேற்று அந்த சிறுமி பதின் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அப்போது, அவருடன் ஒரு வயதான நபர் இருந்தார். அவர் அந்தச் சிறுமியைத் திருமணம் செய்ததாகவும், சிறுமி இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் கூறி சான்றிதழ்களையும் காட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், “எங்கள் மகள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்து, கட்டாயமாக திருமணம் செய்யப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டினர். மேலும், “ஏழு பெண் குழந்தைகளுக்கு தந்தையாகிய ஒரு போதைப்பொருள் வியாபாரியுடன் எங்கள் 15 வயது மகள் எப்படி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ‘தரவார் இட்டேகாத் பாகிஸ்தான்’ என்ற சிறுபான்மையினருக்கான நல அமைப்பின் தலைவர் சிவா கச்சி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “இந்தச் சிறுமி தன்னிச்சையாக இதை செய்திருக்க முடியாது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, வழக்கைத் தொடர எங்கள் வழக்கறிஞர்களிடம் பேசியுள்ளோம். மேலும், தனி விசாரணை நடத்துமாறு மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்,” என்றார். இந்தச் சம்பவம் தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மை சமூகத்தினரிடையே கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.