வடகிழக்கு டெல்லியின் வெல்கம்  பகுதியில், சந்தேகத்தின் காரணமாக தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தீபக் (28) என்ற வாலிபர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவரிடம் காய்கறி வாங்க வந்த ஹீனா கான் (23) என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு வீட்டின் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், வீட்டை விட்டு வெளியேறிய ஹீனா, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக தீபக்கை காதல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், தீபக்கிற்கு தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று ஆத்திரமடைந்த தீபக், ஹீனாவை கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹீனா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தீபக் தானாகவே காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.

கொல்லப்பட்ட ஹீனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே, ஹீனாவின் குடும்பத்தினர் தீபக் மீது அதிரடி புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், “தீபக் எங்கள் மகளை மதமாற்றம் செய்யும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு ஹீனா சம்மதிக்காததால் திட்டமிட்டு அவரைக் கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

தனது குடும்பத்தை விட்டுவிட்டு நம்பி வந்த கணவனே கொடூரனாக மாறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  சந்தேகத்தால் இந்த கொலை நடந்ததா அல்லது குடும்பத்தினர் கூறுவது போல மதமாற்ற விவகாரம் இதில் பின்னணியாக உள்ளதா என்ற கோணத்தில் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.