நாமக்கல் மாவட்டம் மழை வேப்பங்கொட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கார்த்திக் மாமனார் வீட்டிலேயே தங்கி கட்டணம் பாளையம் பகுதியில் தோட்டத்து வேலைகள் பார்த்து வந்தார்.

தோட்டத்து வீட்டில் நித்யாவின் தாய் ராசாத்தி, ராசாத்தியின் இரண்டாவது கணவர் ராஜேந்திரன் ஆகியோரும் தங்கி இருந்தனர். நித்யா கார்த்திக் தம்பதிக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக் வேலைக்கு செல்லாமல் மனைவி மாமனார் மாமியார் ஆகியோரை தொந்தரவு செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த நித்யா, ராசாத்தி, ராஜேந்திரன் ஆகியோர் கார்த்திக்கை கட்டையால் அடித்து கொலை செய்தனர். பின்னர் கார்த்திக்கின் தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மகன் கீழே விழுந்து இறந்து விட்டார் என கூறியுள்ளனர்.

இதனை நம்பி வந்த உறவினர்கள் கார்த்திக்கின் உடலை புதைக்க இறுதி சடங்கு செய்தனர். அப்போது கார்த்திக்கின் மகன் “பாட்டி அப்பா கீழ விழுந்து செத்துப் போகல. ராசாத்தி பாட்டி, தாத்தா, அம்மா எல்லாரும் சேர்ந்து அடிச்சு கொன்னுட்டாங்க” என கூறியுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.