புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 09, 2026) களம் பரபரப்படைந்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு செட்டியார் கிராம மக்கள் எடுத்துள்ள ஒரு துணிச்சலான முடிவு இப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

“எச்சரிக்கின்றோம்” என்ற தலைப்பில் ஊர் பொதுமக்களும், பஞ்சாயத்தாரும் இணைந்து ஊர் எல்லையிலேயே ஒரு பிரம்மாண்ட அறிவிப்பு பேனரை வைத்துள்ளனர்.

“ஓட்டுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது; அப்படி வாங்குவது குற்றம். யாராவது வாங்கியது தெரிந்தால் அவர்கள் மீது ஊர் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்து கொடுங்கள்; பணம் கொடுக்கும் வேட்பாளர்களைப் புறக்கணிப்போம்” என அந்தப் பேனரில் மிகத் தெளிவாகவும், காரமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமாகத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பணத்தைக் கொண்டு வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபடும். ஆனால், ஒரு கிராமமே ஒன்று திரண்டு இப்படி “நோ எண்ட்ரி” கொடுத்திருப்பது வேட்பாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்தைக் காக்கக் கிளம்பியுள்ள இந்தக் கிளிஞ்சல்மேடு மக்களின் செயல், மற்ற பகுதிகளுக்கும் ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.