தூத்துக்குடியில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக ஒரு ஆன்மீக அமைப்பு எடுத்துள்ள துணிச்சலான முடிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மாசிலாமணிபுரத்தில் அமைந்துள்ள சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலைச் சார்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வரிதாரர்கள் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மேலும் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை ஜனநாயகத்திற்கே” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கோவில் வளாகத்தின் முன் வைத்துள்ள அவர்கள், நேர்மையான முறையில் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கமாகும். வாக்கு என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய மூலப்பொருள் என்றும், அதை பணத்திற்கு விலை பேசுவது ஜனநாயகத்தை சீரழிக்கும் என்றும் அக்கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரசியலில் நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்கவும், தார்மீக அடிப்படையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த முயற்சி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.