சென்னையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஓய்வுபெற்ற வருமான வரித்துறை ஆணையர் மற்றும் அவரது மனைவி மீது மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) வழக்குப்பதிவு செய்துள்ளது. வருமான வரித்துறையில் ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ரெங்கராஜ். இவர் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

​அந்த விசாரணையின் அடிப்படையில், ரெங்கராஜ் மற்றும் அவரது மனைவி மீது தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர் தனது வருமானத்தை விடக் கூடுதலாக 23 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 7 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதி மற்றும் 16 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் அடங்கும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் அதிகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள இச்சம்பவம் சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.