தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தாா்.
இந்தத் துயரச் செய்தியை அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “தனது உயிருக்கு உயிராக, உற்ற துணையாக இருந்த வாழ்விணையரை இழந்து வாடும் சகோதரர் கே.எஸ். அழகிரிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின், கே.எஸ்.அழகிரியை தொலைபேசி வாயிலாகத் நேரடியாகத் தொடர்பு கொண்டார். அப்போது, வத்சலாவின் மறைவு குறித்துத் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்ட முதல்வர், கே.எஸ்.அழகிரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். மேலும் வத்சலாவின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
