“காங்கிரஸ் கட்சியில் ஒருசிலர் உயிரை வாங்கி வருகிறார்கள்; தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பிலான பிரசாரப் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்ததாவது:

“எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை. திராவிட இயக்கத்தை வீழ்த்த இனிமேல் ஒருவன் பிறந்துதான் வர வேண்டும். 1967-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியால் ஏன் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை? இதைச் சொன்னால் அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். மறைந்த முதல்வர் கருணாநிதி 110 இடங்களில் வென்றபோது கூட்டணி ஆட்சி கொடுத்தாரா? இல்லையே!”

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியுடனான உறவு குறித்து வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தினார்:  “காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒருசிலர் தேவையில்லாமல் உயிரை வாங்கி வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் எதைச் சொல்கிறாரோ அதைக் கேட்பதே நம் கொள்கை. தனியாக நிற்கச் சொன்னால் கூட நாம் தயாராகவே இருக்கிறோம்.” முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெற்றி தொடர்பான தேர்தல் வழக்கு குறித்து முதல்வர் தன்னிடம் கேட்ட தகவலையும் அவர் மேடையில் பகிர்ந்துகொண்டார்.

தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தவெக-வுக்கு ஆதரவான சில காங்கிரஸ் நிர்வாகிகளின் பேச்சு திமுக தலைமையைக் கோபமடையச் செய்துள்ளது. இந்நிலையில், இன்று டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதற்கிடையில் அமைச்சர் ராஜகண்ணப்பனின் இந்தப் பேச்சு, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதா என்ற கேள்வியையும், தொகுதிப் பங்கீட்டில் திமுகவின் கையே ஓங்கியிருப்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.