வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிடத் தொழிலாளியை, அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (29). பெங்களூருவில் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவருக்கும், வேலூர் மாவட்டம் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மோனிஷா (23) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, குழந்தைகளை மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் விட்டுவிட்டு, பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் (31) என்பவருடன் மோனிஷாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்களது உறவு நீடித்து வந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த விவகாரம் கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியவந்தது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு கிருஷ்ணமூர்த்தி தன்னைத் துன்புறுத்துவதாக, மோனிஷா தனது காதலன் அன்பழகனிடம் கூறி அழுதுள்ளார். இதனால் கிருஷ்ணமூர்த்தியைத் தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணமூர்த்தி மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மோனிஷா அளித்த தகவலின் பேரில், அன்பழகன் தனது நண்பர் சுப்பிரமணியுடன் (41) மேல்பள்ளிப்பட்டு கிராமத்திற்கு வந்துள்ளார். மோனிஷாவிடம் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, அதனைச் சாப்பாட்டில் கலந்து கணவருக்குக் கொடுக்குமாறு அன்பழகன் கூறியுள்ளார்.
அதன்படி, இரவு உணவில் மாத்திரையைக் கலந்து கொடுத்து கிருஷ்ணமூர்த்தியை மோனிஷா தூங்க வைத்துள்ளார். பின்னர் அன்பழகனுக்குத் தகவல் கொடுத்தார். நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்ற அன்பழகனும், சுப்பிரமணியும் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தைத் துண்டால் இறுக்கிக் கொலை செய்தனர். அப்போது மோனிஷா வெளியில் நின்று கொண்டு எவரும் வராமல் கண்காணித்துள்ளார்.
மறுநாள் காலை தனது கணவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக மோனிஷா நாடகமாடினார். ஆனால், கிருஷ்ணமூர்த்தியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோனிஷாவிடம் நடத்திய தீவிர விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மோனிஷா, அவரது கள்ளக்காதலன் அன்பழகன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சுப்பிரமணி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
