கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில், தொழிலாளி மற்றும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருமனை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பெண்ணின் கணவருக்குத் தெரியவந்ததை அடுத்து, ஆத்திரமடைந்த அவர் இருவரையும் வழிமறித்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அருமனை காவல்துறையினர், கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட கணவரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்பத் தகராறு காரணமாகப் பட்டப்பகலில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
