மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு தாய் தனது கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக, தனது இரு சிறு குழந்தைகளையும் பந்தர்பூர் – சம்பாஜிநகர் செல்லும் பேருந்தில் அநாதையாக கைவிட்டுச் சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய அந்தப் பெண், வெளியே காத்திருந்த கள்ளக்காதலனுடன் ஸ்கூட்டரில் ஏறி தப்பியோடினார்.

மேலும் அவர் செல்வதற்கு முன்பாக, குழந்தைகளின் பாக்கெட்டில் ஒரு கடிதத்தை வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அந்த கடிதத்தில், ‘இந்தக் குழந்தைகளுக்குத் தாய், தந்தை யாரும் இல்லை, இவர்களை யவத்மால் பேருந்தில் ஏற்றி விடுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், அதில் அவர்களின் தாத்தாவின் அலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் பேருந்து புறப்பட்டவுடன் தாய் அருகில் இல்லாததைக் கண்டு அந்த இரு சிறு குழந்தைகளும் கதறி அழத் தொடங்கின. இதனால் சந்தேகமடைந்த நடத்துனர், குழந்தைகளைச் சோதித்தபோது அவர்களிடம் இருந்த கடிதம் மற்றும் தாத்தாவின் எண் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு தாத்தாவை அழைத்தபோது, அவரும் அந்தக் குழந்தைகளைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.

இந்த இரக்கமற்ற மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பீட் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.