தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் மகன் வினோத்குமார் (38). இவர் புகைப்படக் கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நித்யா (35). இத்தம்பதியருக்கு 12 மற்றும் 8 வயது மகள்கள், 5 வயது மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் வழியாக பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர், அந்த நபருடன் நெருங்கிய உறவு வளர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு அந்த நபருடன் சென்றுவிட்டார்.
மனைவி தன்னை விட்டு சென்ற பின்னரும், அவரை மறக்க முடியாமல் கணவன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியைச் சந்தித்து, மீண்டும் குடும்ப வாழ்க்கை நடத்த வருமாறு கேட்டபோதும், நித்யா மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார், நேற்று மாலை தனது மூன்று குழந்தைகளுக்கும் பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். குழந்தைகள் பலகாரங்களை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, தந்தை வினோத்குமார் திடீரென கத்தியை எடுத்துக் கொண்டு மூவரின் கழுத்தையும் அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மூன்று குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், குழந்தைகளை கொலை செய்த வினோத்குமார் தானே காவல் நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், மூன்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறை வினோத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
