திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கோகினூர் பங்களா அருகே உள்ள தனியார் பங்களாவில் ஜான்சன் பாபு என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சன் சசிரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக அந்த பங்களாவில் கட்டுமான பணிகள் நடந்தது. அப்போது வேலைக்கு வந்த ஆண்டனி என்பவருடன் சசி அக்காவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை ஜான்சன் பாபு கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜான்சன் பாபு மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் சசிரேகா ஆண்டனியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் உரையாடல்கள் ஜான்சன் பாபுவுக்கு கிடைத்தது. அதனை வைத்து மனைவியின் குடும்பத்தினரிடம் ஜான்சன் பாபு நியாயம் கேட்டார்.
ஆனால் அவர்கள் வீடியோ மற்றும் ஆடியோவை தங்களிடம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜான்சன் பாபு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜான்சன் பாபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த ஜான்சன் பாபுவின் உறவினர்கள் சசிரேகா உறவினர்கள் மிரட்டல் விடுத்ததால் தான் ஜான்சன் பாபு தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இது விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
