குடும்பத் தகராறு காரணமாக, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளம்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த அரசுப் பள்ளி ஆசிரியரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது ராஜஸ்தான் மாநிலம், மல்வா கோயலான் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார் (21). இவருக்கும் பாகுண்டி பகுதியைச் சேர்ந்த அனு தேவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஆனால், இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாத அனு தேவி, தனது கணவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பெரும்பாலான நாட்களை அவர் தனது தாய் வீட்டிலேயே கழித்து வந்துள்ளார். இவர் தாய் வீட்டில் இருந்தபோது, அமராராம் என்ற அரசுப் பள்ளி ஆசிரியருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
கணவன் – மனைவி இடையிலான மோதல் குறித்து ஊர் பஞ்சாயத்து கூடிப் பேசியதை அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்புதான் அனு தேவி மீண்டும் கணவர் வீட்டிற்குத் திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது கணவர் மகேந்திர குமார் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, தனது கள்ளக்காதலன் அமராராமை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து மகேந்திர குமாரின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் மகேந்திர குமார் எழாததால் சந்தேகமடைந்த அவரது தாய், அறைக்குச் சென்று பார்த்தார். அப்போது மகேந்திர குமார் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது உடலில் காயங்கள் மற்றும் கழுத்தில் நெரிக்கப்பட்ட தழும்புகள் இருந்ததால், மகேந்திர குமாரின் சகோதரர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அனு தேவியிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் தனது கள்ளக்காதலன் அமராராமுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அனு தேவி மற்றும் ஆசிரியர் அமராராம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
