தெலுங்கானா மாநிலம் உய்யூர் அடுத்த ஆகனூர் பகுதியைச் சேர்ந்த பிரசாத் ராவ் என்பவரது வீட்டிற்குள் காவி உடை அணிந்த 4 நபர்கள் மந்திரங்களை உச்சரித்தபடி அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மணியிடம் தங்களுக்குச் சொந்தமான ஆசிரமத்தில் உள்ள பசுக்களைப் பராமரிக்க ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மணி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய நிலையில் அந்த நபர்கள் அவருக்குச் சாபம் விட்டு நாசமாக்கி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டலால் பெரும் அச்சமடைந்த மணி தனது வீட்டில் இருந்த 5000 ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
அந்தச் சமயத்தில் வீட்டிற்கு வந்த மணியின் மருமகன் வெங்கட சிவராம கிருஷ்ணாவிடமும் அந்த நபர்கள் வலுக்கட்டாயமாக ஆயிரம் ரூபாயைப் பறித்துக் கொண்டுள்ளனர். இது குறித்து மணி மற்றும் அவரது மருமகன் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மந்திரங்கள் ஓதி மிரட்டிப் பணம் பறித்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலிச் சாமியார்களின் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
