மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே கர்காட் காம்தி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட சத்துணவில் செத்த பாம்பு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மையத்திலிருந்து ஊட்டச்சத்து மாவுப் பொட்டலத்தை வாங்கிச் சென்ற வச்சலா பாய் துர்வே என்ற கர்ப்பிணிப் பெண், வீட்டில் வைத்து அதனைத் திறந்து பார்த்தபோது உணவில் செத்த பாம்பு குட்டி கிடப்பதைக் கண்டு உறைந்துபோனார். இச்சம்பவம் குறித்து அவர் உடனடியாகத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களும் பெண்களும் அங்கன்வாடி மையத்தின் முன்பாகத் திரண்டு, அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்துக் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

பொதுமக்களின் தொடர் போராட்டத்தையும், விவகாரத்தின் தீவிரத்தையும் அடுத்து, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஐந்து பேர் கொண்ட உயர் மட்ட விசாரணைக் குழுவை மாவட்ட பொறுப்பு ஆட்சியர் அக்ரிம் குமார் உடனடியாக நியமித்துள்ளார். அந்தப் பொட்டலத்திலிருந்து கைப்பற்றப்பட்ட உணவு மாதிரிகள் போபாலில் உள்ள மாநில உணவுப் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் ஆய்வக அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகள் கிடைத்த பிறகு, அலட்சியமாகச் செயல்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.