கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த சம்பவத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றமே ஓய்வு பெற்ற நீதிபதி சார்பில் விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக வந்து விசாரணை நடத்தியது எப்படி என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் தனி நீதிபதி தலையிட்டதே தவறு என்றது. அதன் பிறகு கரூர் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் ஒருவரது தந்தை சிபிஐ விசாரணை வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனவும் சிறப்பு புலனாய்வு குழுவில் இருக்கும் அதிகாரி திறமை வாய்ந்த அதிகாரி என்பதால் இந்த குழு நம்பகமாக விசாரணை செய்யும் என்று வாதிட்டது. உயிரிழந்த சிறுவனின் தரப்பில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ரவுடிகள் மற்றும் ஆளும் கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டனர் என்று கூறப்பட்ட நிலையில் ஆதாரமில்லாமல் இது போன்ற வாதங்களை முன்வைக்க கூடாது என தமிழ்நாடு அரசு தரப்பு கூறிய நிலையில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு போலீசுக்கு கூட காயம் ஏற்படவில்லையே என வாதிட்டார். அதாவது பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் ஒரு போலீசாரை கூட தான் பார்க்க வில்லை எனவும் ஒரு போலீசுக்கு கூட இதில் காயம் ஏற்படவில்லை எனவும் உயிரிழந்த சிறுவனின் தரப்பு வாதத்தை முன் வைத்தது.
அப்போது அரசு தரப்பில் போலீசுக்கு காயம் ஏற்படவில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமா இது என்ன வாதம் என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் உட்பட ஐந்து பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்ற நீதிமன்றம் வாதங்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததோடு தேதி குறிப்பிடாமல் வழக்கின் விசாரணையில் ஒத்தி வைத்தது. அதோடு இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி கொடுத்த நிலையில் மனுதாரர்களும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது
