தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தவுடன், கரூர் விவகாரம் தொடர்பாக தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைக்குச் செல்வது உறுதி என்று த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது,

விளிம்புநிலை மக்களுக்காகக் குரல் கொடுத்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், இன்று தி.மு.க. தலைவரைப் பார்த்தாலே அச்சப்படுகிறார். என்றார். பின்னர் கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “செந்தில் பாலாஜிதான் இந்த வழக்கில் முதல் குற்றவாளி. சிபிஐ சம்மன் வந்ததும் அவர் பயந்துபோய், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் என அனைவரையும் இந்த வழக்கில் இழுத்து விடத் தயாராகிவிட்டார்.

கரூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது திட்டமிட்டு செருப்பு வீசப்பட்டது. வேறு எந்த மாவட்டத்திலும் நடக்காத இந்த அநாகரிகச் செயல், செந்தில் பாலாஜியின் தூண்டுதலால் கரூரில் மட்டும் நடைபெற்றது” என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்ததும், காவல்துறை கட்டுப்பாட்டிற்கு வரும். அப்போது கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜி மட்டுமல்லாது, இதற்குப் பொறுப்பான தி.மு.க.வின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் சட்டத்தின் பிடியில் சிக்கி சிறைக்குச் செல்வது உறுதி. இது நடக்குமா இல்லையா என்பதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.