தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டும் விவசாயிகளிடம் பாசத்தைக் காட்டும் பிரதமர் மோடி, விவசாயிகளின் நலனுக்காகச் செய்தது என்ன? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் திருச்சி வருகை மற்றும் அவரது விவசாயி நலன் குறித்த கருத்துகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது,

“திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் மோடி விவசாயிகளின் நண்பனைப் போலப் பேசி கபட நாடகம் ஆடியுள்ளார். தேர்தலை முன்னிட்டு திடீரென விவசாயிகளின் மீது பாசம் வந்துவிட்டது போலும். ஆனால், நாட்டில் விவசாயிகள் குறித்துப் பேசுவதற்குப் பிரதமருக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில், இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு விவசாயிகள் பெரும் போராட்டங்களைச் சந்தித்துள்ளனர். இந்த ஆட்சியில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட அவல நிலையும் நீடிக்கிறது.”

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்னவானது? அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி நான்கு பேரைக் கொன்ற கொடூர சம்பவத்தை ஒட்டுமொத்த நாடும் இன்னும் மறக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.  அதன்பிறகு “மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு தான் முழு ஆதரவு அளித்தது” என்று குறிப்பிட்டார்.