அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சமீபத்திய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்களால்தான் தமிழ் கலாச்சாரம் அழிந்தது என திருமாவளவன் பேசியதாகக் கூறப்படுகின்றன.
மேலும் தமிழர்களின் வீரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்து, தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் மன்னர்களைப் பற்றி இவ்வாறு பேசுவது ‘அரைவேக்காட்டுத்தனம்’ என்று விமர்சித்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மன்னர்களைத் தரக்குறைவாகப் பேசுவதை அவர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்களா என வினவும் திருமாவளவன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்தானா என்று கேட்கும் தைரியம் இருக்கிறதா என காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் திமுக தலைமையைத் திருப்திப்படுத்துவதற்காகத் தமிழ் மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீச வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அவர், அரசியல் லாபத்திற்காகத் தமிழ் அடையாளங்களைச் சிதைக்கக் கூடாது எனவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
