டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத விதமாகத் திணறி வருகிறது. சமீபகாலமாக அதிரடி காட்டி வந்த அபிஷேக் சர்மா, தனது அறிமுக உலகக் கோப்பை போட்டியிலேயே முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலம் கௌதம் கம்பீர், ஷர்தூல் தாகூர் போன்ற வீரர்களின் வரிசையில் அறிமுகப் போட்டியிலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்த 5-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த அமெரிக்க அணிக்குச் சாதகமாக ஆட்டம் அப்படியே திரும்பியது. மறுபுறம் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 20 ரன்களிலும், திலக் வர்மா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் மூன்று வீரர்களும் இடது கை பேட்டர்களாகக் களமிறங்கியும், இந்தத் திட்டம் கை கொடுக்கவில்லை. அதிலும் ஷிவம் துபே முதல் பந்திலேயே வெளியேறியது இந்தியாவைப் பாதாளத்திற்குத் தள்ளியது.

பவர் பிளே முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்து இந்திய அணி தடுமாறி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் குவித்து அசத்திய இந்திய பேட்டர்கள், அமெரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.