டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அமெரிக்காவிற்கு எதிரான தொடக்க ஆட்டத்தில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்காதது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான இப்போட்டியில் பும்ரா விளையாடாததற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள ‘வைரல் காய்ச்சல்’ என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் களமிறக்கப்படவில்லை என்றும், இது கவலைப்படக்கூடிய நீண்ட கால பாதிப்பு அல்ல என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மைதானத்தின் எல்லைக் கோட்டிற்கு அருகே பும்ரா காணப்பட்டார். குறிப்பாக, குடிநீர் இடைவேளையின் போது அவர் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் சென்ற காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது. இதைக் கண்ட ரசிகர்கள், “வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரால் எப்படி மைதானத்தில் சுறுசுறுப்பாக இயங்க முடியும்?” என்று கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் நெட்டிசன்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து விவாதித்து வருகின்றனர். அதாவது பலவீனமான அணி எனக் கருதப்படும் அமெரிக்காவிற்கு எதிராக பும்ராவிற்கு ஓய்வு அளிக்கவே ‘வைரல் காய்ச்சல்’ என்ற காரணத்தை நிர்வாகம் கையில் எடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மற்றொரு தரப்பினரோ, “முக்கியமான நாக்-அவுட் போட்டிகளுக்கு பும்ராவை தயார் நிலையில் வைத்திருக்க, பணிச்சுமை மேலாண்மை (Workload Management) அடிப்படையில் அவருக்கு ஓய்வு அளித்தது புத்திசாலித்தனமான முடிவு” என நிர்வாகத்தை ஆதரிக்கின்றனர்.

மேலும் முக்கியமான தொடரின் தொடக்கத்திலேயே இந்திய அணியின் முதன்மை பந்துவீச்சாளர் குறித்து எழுந்துள்ள இந்த விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.