சென்னையில் எதிரி கும்பலிடம் இருந்து உயிர் தப்பிக்க ரவுடி ஒருவர் டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் புகுந்து சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு ஒரு கொலை வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதி அவர் தலைமறைவாக இருந்த நிலையில், மயிலாப்பூர் பகுதியில் வைத்து அவரது எதிரி கும்பல் அப்புவை வழிமறித்து கொலை செய்ய முயன்றுள்ளது.
அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய அப்பு, வேறு வழியின்றி மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் தஞ்சம் புகுந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் தன்னிடம் இருந்த கத்தியை ஒப்படைத்து தன்னை காப்பாற்றுமாறு கோரினார். இதையடுத்து, அவரை மீட்ட போலீஸார் மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரைத் துரத்தி வந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
