உத்தரபிரதேசம், பிரதாப்கரில் நின்றுக் கொண்டிருந்த ரயிலின் மீது ஒருவர் ஏறி நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் மௌஹர் படக் ரயில் நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது ரயில் நிலையத்தில் ரயில் நின்றிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென ரயிலின் கூரை மீது ஏறி நடந்து கொண்டிருந்தார். நடைமேடையில் இருந்த பயணிகள் பலமுறை எச்சரித்தும், அந்த நபர் கீழே இறங்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேல்நிலை மின் கம்பிகள் அருகில் இருப்பதால், மின்சாரம் தாக்கும் ஆபத்து மிக அதிகமாக இருந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் பதட்டமடைந்தனர்.
Subway Surfers Indian edition in real life pic.twitter.com/CvBI6HiLUa
— Vishal (@VishalMalvi_) December 7, 2025
சூழ்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகளில் ஒருவர் உடனடி நடவடிக்கை எடுத்தார். அவர் ரயிலின் கூரையின் மீது ஏறி, அந்த நபர் இருக்கும் இடத்துக்கு ஓடி சென்று, அவரை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக கீழே இறக்கினார். இந்த விரைவு மீட்பு நடவடிக்கை அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.
மேலும் சம்பவத்திற்கான காரணம், அந்த நபரின் நடத்தை குறித்து, ரயில்வே துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடவில்லை. இதற்கிடையே, சம்பவத்துக்கான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
