மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரில் அதிர்ச்சி அளிக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தானே குடும்ப நல நீதிமன்ற வளாகத்திலேயே ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் ஹீரலால் கேதார் மற்றும் ரவி பவார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கேதார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பவார் தலைமறைவாக உள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடந்திருந்தாலும், குற்றவாளிகள் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் டிசம்பர் 5ஆம் தேதி தான் தானே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூட இந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்லாமல் பயத்தில் இருந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்திருந்தாலும், கடந்த மாதம் குற்றவாளிகளில் ஒருவர் மீண்டும் அந்தப் பெண்ணிடம் பாலியல் சலுகைகள் கேட்டுத் தொந்தரவு செய்ததால், வேறு வழியின்றி அவர் காவல்துறைக்குச் சென்றுள்ளார்.
குடும்ப நல நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்தச் சம்பவத்தில், மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் அந்தப் பெண்ணுக்கு கேக்கில் போதைப்பொருள் கலந்து கொடுத்து, அதன் பிறகு, நான்கு சக்கர வாகனத்தில் வைத்து ஹீராலால் கேதார் மற்றும் ரவி பவார் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், குற்றவாளிகள் இருவரும் யூடியூப் பத்திரிகையாளர்கள் என்றும், இவர்கள் மீது ஏற்கனவே பணப்பறிப்பு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் தானே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
