ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) தலைமை கான்ஸ்டபிள் ஒருவர் காட்டிய முரட்டுத்தனமான நடத்தையைப் பதிவு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாக்டா ரெயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தை, அங்கு இருந்த ஒரு பயணி தனது மொபைலில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

வீடியோவில், சீருடை அணியாத நிலையில் இருந்த தலைமை கான்ஸ்டபிள் மான் சிங், பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் கோபத்துடன் சென்று, அவரை காலால் உதைப்பதும், அங்கிருந்து விரட்டுவதும் தெளிவாகக் காணப்படுகிறது. வலியால் துடித்த அந்த நபர் கண்ணீருடன் பையை எடுத்துக்கொண்டு நொண்டியபடி அங்கிருந்து செல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

 

சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மான் சிங், அந்த நபர் குடிபோதையில் இருந்து பயணிகளைத் தொந்தரவு செய்ததால் தான்இவ்வாறு நடந்து கொண்டதாக கூறினார். ஆனால் இந்த விளக்கம் அதிகாரிகளை திருப்திப்படுத்தவில்லை. இதையடுத்து மான் சிங்கை உடனடியாக இடைநீக்கம் செய்து, முழு சம்பவத்துக்கும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், மாற்றுத்திறனாளி நபரிடம் காட்டப்பட்ட இதயம் இல்லாத நடத்தை குறித்து கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.