உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க சுசீலா தேவி என்ற மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு, அவரது மருமகள் பூஜா ஜாதவ் குறித்து வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதாவது சுசீலா தேவி முதலில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த நகைகளும் மாயமாகி இருந்ததால், இது கொள்ளை முயற்சியில் நடந்த கொலை என போலீசார் முதலில் கருதினர். ஆனால், மருமகள் பூஜாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மொத்த உண்மையும் வெளிவந்தது.
பூஜாவின் பின்னணி ஒரு த்ரில்லர் சினிமா கதையையே மிஞ்சும் வகையில் உள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன் காதலித்து கரம் பிடித்த முதல் கணவரை, கூலிப்படை ஏவி கொல்ல முயன்றவர் இந்த பூஜா. அந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தபோது, நீதிமன்றத்தில் கல்யாண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்துள்ளார்.
சாலை விபத்தில் கல்யாண் இறந்த பிறகு, அவரது குடும்பத்திடம் உதவி கேட்டுச் சென்ற பூஜா, அங்கு கல்யாணின் அண்ணன் சந்தோஷை வளைத்துப் போட்டு திருமணம் செய்து கொண்டார். சந்தோஷிற்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்தும், பூஜாவின் வசீகர வலையில் விழுந்து அவரை மணந்துள்ளார். அதோடு நிறுத்தாமல், தனது மாமனாருடனும் பூஜா தகாத உறவை வைத்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உயிரிழந்த கல்யாணின் பங்கிற்குச் சேர வேண்டிய 8 பிகா நிலத்தை விற்றுப் பணமாக்க பூஜா திட்டமிட்டார். இதற்கு சந்தோஷும், மாமனாரும் சம்மதித்த நிலையில், மாமியார் சுசீலா தேவி மட்டும் முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். நிலத்தை விற்க விடாமல் தடுத்த மாமியாரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த பூஜா, கடந்த ஜூன் 24 அன்று அவரைத் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளார். தற்போது பூஜா ஜாதவை கைது செய்துள்ள போலீசார், இந்தச் சதித் திட்டத்தில் அவருக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
