சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கனவோடு ஏழு கடல் தாண்டிச் செல்லும் பல இந்தியர்களின் வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய வலி இது. தனது தாயின் இறுதிப் பயணத்தில் கூட உடன் இருக்க முடியாத ஒரு மகனின் ஏக்கம் இன்று பலரையும் கலங்க வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிழைப்புக்காக வெளிநாட்டில் தங்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இருந்த அவரது தாய் காலமானார். விசா சிக்கல் அல்லது பணி நெருக்கடி காரணமாக உடனடியாகத் தாயின் இறுதிச்சடங்கிற்கு அவரால் வர முடியவில்லை.
View this post on Instagram
இதனால், வீடியோ கால் மூலமாகவே தனது தாயின் இறுதி ஊர்வலத்தைப் பார்த்த அந்த இளைஞர், செல்போன் திரையில் தெரியும் தனது தாயின் முகத்தை மீண்டும் மீண்டும் முத்தமிட்டு, குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதார். இந்த உருக்கமான காட்சியை அந்த இளைஞரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “பணம் முக்கியம் தான், ஆனால் அதைவிட உறவுகள் மிக முக்கியம். இப்படியான ஒரு நாளை கடவுள் யாருக்கும் காட்டக்கூடாது” என வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், இவ்வளவு சோகமான தருணத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர வேண்டுமா? என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
