இந்தியாவின் மிக உயரிய ரயில்களில் ஒன்றாகக் கருதப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸிலேயே சுகாதாரக் குறைபாடு இருப்பதாக எழுந்துள்ள புகார், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்ய பிரகாஷ் தீட்சித் என்ற சமூக வலைதளப் பிரபலம், சியால்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸின் 2AC பெட்டியில் பயணித்துள்ளார். சாப்பிடும்போது எதிர்பாராத விதமாக அவரது இருக்கையில் சிறிது உணவு சிதறியுள்ளது.
அதைச் சுத்தம் செய்வதற்காக அவர் ஈரமான டிஷ்யூ பேப்பரை (Wet Wipes) வைத்துத் துடைத்தபோது, அந்த இருக்கையில் படிந்திருந்த அழுக்குகள் அனைத்தும் டிஷ்யூவில் ஒட்டிக்கொண்டன.
View this post on Instagram
இருக்கை பார்ப்பதற்குச் சுத்தமாகத் தெரிந்தாலும், உண்மையில் அது எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்பதைப் பார்த்து அவர் அதிர்ந்து போனார்.
“இந்த ஒரு டிக்கெட்டுக்காக நான் 4,300 ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளேன். இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு, இப்படி அழுக்கான இருக்கையில்தான் பயணிகள் தூங்க வேண்டுமா? இதற்கு யார் பொறுப்பு?” என அவர் வீடியோவில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோவை @thetrainguru என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ 44,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
