ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில், 3 வயது பிஞ்சுக் குழந்தையை ஆற்றின் பாலத்திலேயே தனியாக தவிக்க விட்டுவிட்டு, தம்பதியினர் இருவரும் ஆற்று நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
எதற்காக இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவராத நிலையில், பெற்ற பெற்றோர்கள் கண் முன்னே ஆற்றில் குதித்து மறைந்ததைக் கண்டு, எதுவுமே புரியாமல் அந்த 3 வயது குழந்தை பாலத்தில் கதறி அழுத காட்சி காண்போரின் நெஞ்சைப் பிளப்பதாக அமைந்தது.
சம்பவம் நடந்த அன்று, தம்பதியினர் இருவரும் தங்களது 3 வயது ஆண் குழந்தையுடன் கோதாவரி பாலத்திற்கு வந்துள்ளனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், குழந்தையை பாலத்தின் ஓரத்தில் விட்டுவிட்டு இருவரும் அடுத்தடுத்து ஆற்றுக்குள் குதித்துள்ளனர்.
மேலும் பாலம் வழியே சென்ற வாகன ஓட்டிகளும் வழிப்போக்கர்களும் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து பார்த்தபோது, தம்பதியினர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். பெற்றோரை இழந்து பாலத்தில் தனியாக நின்று அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கண்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், ஆற்றில் குதித்த தம்பதியினரின் உடல்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த தம்பதி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், கடன் தொல்லையா அல்லது குடும்பப் பிரச்சினையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெற்றோரின் இந்த முடிவால், எந்தப் பாவமும் அறியாத 3 வயது பிஞ்சுக் குழந்தை அனாதையாக நிற்க வைக்கப்பட்ட இந்தச் சம்பவம், இணையத்தில் வைரலாகிப் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
